ஆளுமை அறிமுகம் - 04
![]() |
| Dr Ash Sheikh Arafath Careem (Naleemi) |
பேருவளை சீனன்கோட்டையில் பிரபல மாணிக்க வியாபாரியாகத் திகழ்ந்த அப்துல் கரீம் ஹாஜியார் அவர்களது மகன் அல்ஹாஜ் ஏ.ஸீ.எம். ஜிப்ரி, சித்தி நழீரா தம்பதிகளுக்கு மூத்த மகனாக கலாநிதி எம்.ஜே.எம். அரபாத் கரீம் (நளீமி) அவர்கள் 1982 செப்டம்பர் 28 ஆம் திகதி புனித மிகு அரபா தினத்தில் பிறந்தார். சிறுபிராயம் முதலே சிறந்த மார்க்க சூழலில் வளர்க்கப்பட்ட கலாநிதி அவர்கள், தனது ஆரம்ப அடிப்படை மார்க்கக் கல்வியை “பிடவல அல்மிர் அதுஷ் ஷாதுலிய்யா ஸாவியா” பள்ளிக்கூடத்தில் பெற்றுக் கொண்டார். அங்கு அவருக்குக் கிடைத்த கல்வியும் பயிற்சியும் அவரது பிற்கால முன்னேற்றத்தில் பாரிய செல்வாக்குச் செலுத்தியதாக அவர் நன்றியோடு நினைவுகூர்வார்.
கலாநிதி அரபாத் கரீம் தனது பாடசாலைக் கல்வியை பேருவளை அல்ஹுமைஸரா மத்திய கல்லூரியில் தொடர்ந்தார். சிறு வயதிலேயே எழுத்து, வாசிப்பு, பேச்சு ஆகிய துறைகளில் ஆர்வம் காட்டும் மாணவராக இருந்தார். பாடசாலை மட்டத்திலும் ஊரிலும் நடைபெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி முதல் நிலை வெற்றிகளைப் பெற்றுள்ளார். 1998 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த முறையில் சித்தியடைந்த இவர், இஸ்லாமிய கற்கைத் துறையில் உயர்கல்வி கற்பதற்காக ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்துக்குச் சென்றார். இவரது அறிவையும் ஆற்றலையும் திறமையும் வளர்த்துக் கொள்வதற்கு மிகச் சிறந்த களமாக அக்கலாபீடம் அமைந்தது. அங்கிருந்த பெளதீக வளங்களையும் ஆன்மீகச் சூழலையும் தேர்ச்சியுள்ள விரிவுரையாளர்களையும் நன்கு பயன்படுத்தி தன்னைச் சிறந்த அறிவாளுமை கொண்ட ஒருவராக வளர்த்துக் கொண்டார்.
ஜாமிஆவில் முதலாம் வகுப்பு முதல் மிகச் சிறந்த முதல் நிலை மாணவனாக தனது ஏழு வருட கல்விப் பயணத்தைத் தொடர்ந்த இவர், 2006 ஆம் ஆண்டு ஜாமிஆ பட்டப் பரீட்சையில் முதல் தரத்தில் சிரேஷ்ட சித்தியைப் பெற்றுக் கொண்டார். அதே வேளையில், பேராதனைப் பல்கலைக் கழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து B.A பட்டச் சான்றிதழையும் பெற்றுக் கொண்டார்.
கலாநிதி அரபாத் கரீம் 2007 ஆம் ஆண்டு ஜாமிஆ நளீமிய்யா விரிவுரையாளராக நியமனம் பெற்று ஒரு சிறந்த முன்மாதிரியான விரிவுரையாளராக கடமையாற்றினார். தாமதமின்றி தனது பட்டப் பின் படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைத்த போதும் நளீமிய்யாவின் அப்போதைய தேவைகளை கருத்திற் கொண்டு சிறிது காலம் பணிபுரிந்து விட்டு 2013 செப்டம்பர் மாதம் மலேசியாவில் அமைந்துள்ள சர்வதேச இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் தனது முதுமாணிப் பட்டப் படிப்பை மேற்கொள்வதற்காகப் பயணமானார். அங்கு எட்டு விசேட கற்கை நெறிகளை பூர்த்தி செய்ததோடு இஸ்லாமிய சட்டத் துறையில் முதுமாணிப் பட்ட சான்றிதழுக்கான ஆய்வை வெற்றிகரமாக எழுதி தனது பட்டப் பின் படிப்பை நிறைவு செய்தார். முதுமாணிப் பட்டத்திற்காக அரபு மொழியில் எழுதப்பட்ட “வாரிசுரிமை மற்றும் இறுதி விருப்பாவணம்: இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தை மையப்படுத்திய சட்ட நோக்கிலான ஒரு திறனாய்வு” என்ற ஆய்வறிக்கை அந்த பல்கலைக்கழக பேரவையில் பாராட்டுதலைப் பெற்றது. பல்கலைக்கழக வெளியீட்டகம் அதனை ஒரு நூலாக அச்சிட்டு வெளியிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
2015 ஆம் ஆண்டு நாடு திரும்பிய கலாநிதி அரபாத் கரீம் மறுபடியும் ஜாமிஆவில் இணைந்து சிரேஷ்ட விரிவுரையாளராகவும் அடிப்படை கற்கைகள் பிரிவு (Centre For Foundation Studies) தலைவராகவும் கடமை புரிந்தார். தொடர்ந்து PhD பட்டப் பின் படிப்பை மேற்கொள்வதற்கு ஆர்வம் காட்டிய அவர், அதற்கான வாய்ப்புக் கிடைத்த போதும், நளீமிய்யா நிர்வாகத்தின் ஆலோசனைகளையும் வேண்டுகோளையும் மதித்து சில வருடங்கள் அங்கு பணி புரிந்துவிட்டு 2022 பெப்ரவரி மாதம் மலேசியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக் கழகத்திற்கு சென்று PhD பட்டப் படிப்பை மேற்கொண்டார்.
“சமூக நலனை மேம்படுத்துவதில் இலங்கை ஸகாத் நிறுவனங்களின் வகிபாகம்: சிறுபான்மை பிக்ஹை மையப்படுத்திய ஓர் ஆய்வு - The Role of Zakat Management Institutions in the Actualization of Well-being in Sri Lanka: A Critical Study from the Perspective of Fiqh of Muslim Minorities” என்ற தலைப்பை தனது ஆய்வுக்காக தெரிவு செய்தார். மிகக் குறுகிய ஒன்றரை வருட காலப் பிரிவுக்குள் தனது ஆய்வை சிறப்பாகப் பூர்த்தி செய்து PhD பட்டச் சான்றிதழை பெற்றுக் கொண்டார். மலேசியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழக வரலாற்றில் குறுகிய காலத்தில் வெற்றிகரமாக கலாநிதி கற்கையை நிறைவு செய்த ஆய்வுத்துறைச் சாதனை அவருக்கு கிடைத்தது.
![]() |
| Ash Sheikh Dr Arafath Careem |
அப்பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக செயற்படுவதற்கான வேண்டுகோள்கள் விடுக்கப்பட்ட நிலையில் அவர் ஏற்றுக்கொள்ளாமல், தான் கற்ற, தன்னை புடம்போட்டு உருவாக்கிய தாய் நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யாவில் பணி புரிவதற்காகவும் அதன் நிர்வாகத்துக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகவும் நாடு திரும்பி நளீமிய்யாவில் தனது பணியைத் தொடர்கிறார். மலேசியாவில் அவர் தனது கலாநிதி கற்கையை தொடர்ந்திருந்த காலப் பிரிவிக்குள் அவர் மேற்கொண்ட ஆய்வு முயற்சிகள் பாராட்டத்தக்கவையாகும். ஆங்கிலம் மற்றும் அரபு மொழிகளில் அவரால் எழுதப்பட்ட எட்டு ஆய்வுக் கட்டுரைகள் தரம் வாய்ந்த ஆய்வு இதழ்களில் பிரசுரிக்கப்பட்டன. இவர் சர்வதேச ஆய்வு மாநாடுகள் ஐந்தில் கலந்துகொண்டு ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார். இவை தவிர பல ஆய்வுக் கருத்தரங்குகளில் ஆய்வுகளைச் சமர்ப்பித்துள்ளார்.
இந்தவகையில் கலாநிதி அரபாத் கரீம் அவர்கள் ஜாமிஆ நளீமிய்யா உருவாக்கிய சிறந்த ஒரு அறிஞராகவும் ஆய்வாளராகவும் கல்வியியலாளராகவும் விளங்குவது எல்லா வகையிலும் பாராட்டுக்குரியதாகும். அறிவு மற்றும் ஆற்றல்களை மேலும் வளர்த்துக் கொள்வதற்காகத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இஸ்லாமிய சட்டக் கலை, வாரிசுரிமைச் சட்டம், அல்குர்ஆன் விளக்கவுரை, ஸீரா, ஹதீஸ், நவீன இஸ்லாமிய சிந்தனை போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவராக காணப்படுகிறார் . இவர் மிக வேகமாகவும் விவேகமாகவும் செயல்படும் வல்லமை மிக்கவர். தமிழ், அரபு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். ஆய்வு, எழுத்துத் துறையில் ஈடுபாடு காட்டும் இவர், இஸ்லாமிய அழைப்புப் பணி மற்றும் சமூகப் பணிகளில் நீண்ட காலம் ஈடுபட்டு வருகிறார். அல்குர்ஆன் விளக்கவுரை, ஆய்வுரை, ஆய்வுக் கட்டுரை, ஷரீஆ சட்ட விளக்கம் என பல தளங்களில் மிளிர்பவர். இவரது பணிகள் தேசிய மட்டத்திலும் சர்வதேச அளவிலும் பிரகாசித்து வருகின்றன. பல நூல்களையும் நூல்களுக்கான அத்தியாயங்களையும் எழுதி வெளியிட்டு எழுத்துப் பணியை மேற்கொண்டு வருகிறார்.
வல்ல அல்லாஹ் இவரது பணியை பொருந்திக் கொள்வதோடு, நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுத்து, வலிமையாக நின்று தொடர்ந்தும் நற்பணி புரிய அருள் செய்வானாக!
✍️ உஸ்தாத் அஷ்ஷெய்க் ஸீ அய்யூப் அலி - M.A
கல்வித் துறை - பணிப்பாளர்
ஜாமிஆ நளீமிய்யா, பேருவளை





.jpg)

Comments
Post a Comment