நூல் அறிமுகம் - 02
📖 அறிவையும் ஆன்மாவையும் போஷிக்கும் - அல்குர்ஆனிய போதனைகள்
✍ கலாநிதி ஏ.ஜே.எம். ஷிஹான் (நளீமி)
![]() |
| அறிவையும் ஆன்மாவையும் போஷிக்கும் - அல்குர்ஆனிய போதனைகள் |
அல்குர்ஆன் இறைவேதம், இறை அறிவு, இறை வழிகாட்டல், மனிதர்கள் மீது இறைவன் சொரிந்த அருள் மழை, என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. அது எல்லா காலத்திலும், எவ்வகைப்பட்ட சூழலிலும், மனிதர்களோடு பேசிக் கொண்டிருக்கும். ஒவ்வொரு காலத்திலும் வாழ்பவர்கள் தம் பிரச்சினைகளை, உலக நடப்புகளை, எடுத்துக்கொண்டு அதனிடம் தஞ்சமடைகின்றனர், அதனை ஆராய்கின்றனர், அது அவர்களை நெறிப்படுத்தி வழிகாட்டுகிறது. அல்குர்ஆன், மனித வாழ்வின் அனைத்துத் துறைகளையும் ஒளியூட்டும் வழிகாட்டியாக அமைகின்றது.
![]() |
| The Holy Qur'an |
1980 இல் பலஸ்தீனில் பிறந்து பின்னர் லெபனானுக்கு புலம் பெயர்ந்து அங்கு கல்வி பயின்று, லெபனான் பல்கலைக்கழகத்தில் அரபு இலக்கியத்தில் முதுகலைப் பட்டத்தை பெற்ற கலாநிதி அத்ஹம் ஷர்காவி அவர்கள் அல்குர்ஆனை எமது உள்ளங்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்கு ஒரு காத்திரமான முயற்சியை செய்து இருக்கிறார். அவரது இந்த முயற்சி வழமையான அல்குர்ஆன் விளக்கவுரைகளிலிருந்து சற்று வித்தியாசமானது.
![]() |
| கலாநிதி அத்ஹம் ஷர்காவி அத்ஹம் ஷர்காவி د. أدهم شرقاوي |
இந்நூலின் மொழிபெயர்ப்பாளரை பொறுத்தவரையில், கலாநிதி ஏ.ஜே.எம். ஷிஹான் (நளீமி) அவர்கள் 1982, ஹெம்மாத்தகம, கொடேகொடயில் பிறந்தார். (இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் ஒரு பழமையான முஸ்லிம் கிராமமாக ஹெம்மாத்தகம கருதப்படுகிறது.)
![]() |
| Ash Sheikh Dr. A.J.M. Zihan (Naleemi) Zihan Mohammed Zihan A Jawad |
![]() |
| Naleemiah Institute Of Islamic Studies Beruwala, Sri Lanka 🇱🇰 Naleemiah Institute Of Islamic Studies |
![]() |
International Islamic University Malaysia |
இந்த நூலை பற்றி ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் முதல்வர் உஸ்தாத் A.C. அகார் முஹம்மத் அவர்கள் தனது அணிந்துரையிலே குறிப்பிடும் போது,
![]() |
| Usthaz A.C. Agar Muhammad Ash Sheikh A.C. Agar Muhammad |
"இந்நூல் அல்குர்ஆனை நமது அறிவுடனும் ஆன்மாவுடன் உயிருடனும் உள்ளத்துடனும் இணைக்கின்றது. மேலும் இது ஒருவரது முழு வாழ்வும் எப்படி எவ்வாறு அல்குர்ஆனுடன் பின்னிப்பிணைந்ததாக அமைதல் வேண்டும் என்பதை உணர்த்துகின்றது. அல்குர்ஆன் உடனான பயணம் எத்தகைய இன்ப பயணமாக, பேரின்ப பயணமாக அமையும் என்பதையும் அற்புதமாக சொல்கின்றது. மறுபக்கம் அல்குர்ஆனை விட்டும் விலகிச் செல்லும் பயணம் எத்தகைய துன்பமிகு பயணமாக அமையும் என்பதையும் இதனை வாசிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள்."
நூலாசிரியர் ஒவ்வொரு குர்ஆன் வசனத்திற்கும் கவர்ச்சியான ஒரு தலைப்பிட்டு வாசகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொள்கிறார். "மனிதன் யார்?, மனிதர்கள் உங்கள் சேவைகளை மறந்து விடுவார்கள், மனிதர்களுக்கு முன்மாதிரி தேவை, இரகசியங்களை எங்கே வைக்க வேண்டும்?, நன்றி உள்ளவராக இருத்தல், எதற்காக நன்றி சொல்வது?, உண்மையான நண்பனின் தோற்றம் என்ன?" என மொத்தமாக 70 சிறிய அல்குர்ஆனிய பாடங்களை இந்நூலில் உள்ளடக்கி உள்ளார். ஒவ்வொரு பாடமும் ஓர் அல்குர்ஆன் வசனத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது, மேலும் குறித்த வசனம் நமக்கு சொல்லும் செய்தி என்ன? புகட்டும் பாடம் யாது என்பதை மிகவும் எளிமையாகவும் பொருத்தமான வரலாற்று சம்பவங்களுடாகவும் உணர்த்துகின்றார்.
இங்கு பிரதானமாக நான்கு விடயங்களை கோர்த்து ஒவ்வொரு சிறிய ஆக்கமும் எழுதப்பட்டிருக்கின்றது.
ஒன்று அல்குர்ஆனின் ஒரு வசனம் அல்லது வசனத்தின் ஒரு பகுதி.
இரண்டாவது அதன் கருத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட நல்ல வார்த்தைகள்.
மூன்றாவது அந்த வசனத்துடன் தொடர்புபட்ட மனித வரலாற்றில் நடைபெற்ற ஒரு சம்பவம்.
நான்காவது எமது வாழ்வை சுயவிசாரணை செய்து கொள்வதற்கான கேள்விகளும் அதற்கான ஒழுங்கும் சேர்க்கப்பட்டுள்ளன.
சுருக்கமாக சொன்னால்: "
அல்குர்ஆனை மனிதர்களது உள்ளங்களுக்கு கொண்டு செல்வதற்கு நல்ல வார்த்தைகள் அவசியம், அழகான நல்ல வார்த்தைகளை கொண்டு வாழ்க்கை பாடங்கள் (வரலாறு) எழுதப்பட வேண்டும், தனது வாழ்வில் சுயவிசாரணை இல்லாதவன் எங்கே தீண்டப்பட இருக்கிறான் என்பதை அறிய மாட்டான்."
இந்நூலை வாசகர்கள் வெறுமனே வாசிப்பதுடன் மாத்திரம் நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக ஆசிரியர் வித்தியாசமான ஒரு முறையை கையாண்டுள்ளார். ஒவ்வொரு தலைப்பின் முடிவிலும் குறித்த பாடம் சொல்லும் செய்தியை மையப்படுத்தி வாழ்க்கையில் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியது என்ன? தவிர்ந்து கொள்ள வேண்டியது என்ன? என்பது தொடர்பில் இரு வினாக்களை தொடுத்திருக்கிறார். அதன் மூலம் குறித்த அந்த அத்தியாயத்தின் மூலம் நாம் பெற்றுக் கொள்ளும் படிப்பினைகளை எமது வாழ்வில் எடுத்து நடக்க வேண்டும் என விரும்புகிறார்.
இந்நூல், அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ளதாக அமையும் வகையில் சுருக்கமாகவும், தெளிவாகவும் எழுதப்பட்டுள்ளது. இந்நூலைப் படித்து, அல்குர்ஆனின் ஒளியில் அறிவும் ஆன்மாவும் இணைந்து எவ்வாறு சிறக்க முடியும் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். இத்தகைய நூல், இன்றைய உலகில் சிந்தனை மற்றும் ஆன்மீகத்தில் மேம்பாடு பெற விரும்பும் ஒவ்வொருவருக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஒருவருக்கு அல்குர்ஆனுடன் இறுக்கமான மிக நெருக்கமான உறவு தேவை. அது உணர்வுபூர்வமான உறவாகவும் ஈரம் உள்ள உறவாகவும் அமைதல் வேண்டும். அல்குர்ஆனுடன் இத்தகையதோர் உயிரோட்டமிக்க உறவை ஏற்படுத்திக் கொள்ள இந்த நூல் துணை புரியும் என நான் நம்புகின்றேன்.
இந்த புத்தகத்தின் இறுதிவரை நிதானமாக பயணம் செய்யுங்கள். நிச்சயமாக இது உங்களது வாழ்வில் இருளகற்றி வெளிச்சம் கொடுக்க காரணமாக அமையலாம்.
✍️ azeef_ameer








Comments
Post a Comment