ஆளுமை அறிமுகம் - 02

இலங்கையிலுள்ள இஸ்லாமிய அறிஞர்களுள் தனக்கென தனியிடம் பிடித்துள்ள 

உஸ்தாத் அஷ்-ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத்

(இது உஸ்தாத் அஷ்-ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் அவர்களது 15 ஆவது நூலான; "100 வாழ்க்கைப் பாடங்கள்" இன்று (06.08.2025) BMICH இல் வெளியீடு செய்யப்படுவதை முன்னிட்டு இன்றைய தினகரன் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட சிறப்புக் கட்டுரை)

📖 100 வாழ்க்கைப் பாடங்கள்

✍️ உஸ்தாத் அஷ்-ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத்



உஸ்தாத் அஷ்-ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் இலங்கை மண் ஈன்றெடுத்த இஸ்லாமிய அறிஞரும் கல்வியியலாளரும் ஆவார்.

இலங்கை முஸ்லிம் சமூகத்தில் இஸ்லாமிய அழைப்புப் பணியில் இவர் முக்கிய பங்காற்றி வருகிறார். இவர் மக்களை இலகுவில் கவர்ந்திழுக்கும் ஒரு சிறந்த பேச்சாளர், எழுத்தாளர்.

அல்ஹம்துலில்லாஹ் 

அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் 1960ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் திகதி இலங்கையின் வடமேல் மாகாணத்தில் குருணாகலை நகருக்கு அண்மையில் உள்ள 'தோரயாய' எனும் கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை அப்துல் கரீம், தாயார் கமறுன் நிஹார். மூன்று சகோதரர்களையும் ஒரு சகோதரியையும் கொண்ட இவர் குடும்பத்தில் மூன்றாமவர். 1988ம் வருடம் திருமண பந்தத்தில் இணைந்த இவருக்கு ஒரு ஆண், இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் தனது ஆரம்பக்கல்வியை தோரயாய 'அத்தாரிக் முஸ்லிம் வித்யாலயத்திலும்' பின்னர் 'பக்மிகொல்ல அல்மினா முஸ்லிம் மகா வித்யாலயத்திலும்' 'தெலியாகொன்ன ஹிஸ்புல்லா முஸ்லிம் மகா வித்தியாலயம்' என்பவற்றிலும் பெற்றுக் கொண்டார். 1976ம் ஆண்டு தனது உயர்கல்வியை தொடர்வதற்காக பேருவலை 'ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்' பிரவேசம் பெற்ற இவர் 1983ம் ஆண்டு முதற்தர சித்தியுடன் நளீமிய்யா பட்டச்சான்றிதழை பெற்றுக்கொண்டார். பட்டம் பெற்று வெளியேறிய நாள் முதல் இன்று வரை ஜாமிஆ நளீமிய்யாவிலேயே பணியாற்றி வருகின்றார்.


இஸ்லாமிய அழைப்புப் பணியில் நீண்டகால அனுபவம் கொண்டவர் என்ற வகையிலும், சிங்களம், தமிழ்,அரபு, ஆங்கிலம் போன்ற மொழிகளில் நன்கு புலமை பெற்றவர் என்ற வகையிலும் இஸ்லாமிய சிந்தனைகளை முன்வைப்பதிலும், சமூக மட்டத்தில் ஆலோசனைகள் வழங்குவதிலும் தனித்துவமான திறமை கொண்டவர்.

 உஸ்தாத் ஏ.சி. அகார் முஹம்மத் அவர்களின் சிந்தனைகள், இலங்கை முஸ்லிம் சமூகத்தில் மட்டுமல்லாமல் பரந்த இஸ்லாமிய உலகில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அவரது சிந்தனைகளின் முக்கிய அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

உஸ்தாத் ஏ.சி. அகார் முஹம்மத் அவர்கள் அல்-குர்ஆன் மற்றும் ஸுன்னாவை அடிப்படையாகக் கொண்ட ஒரு தூய இஸ்லாமிய வாழ்வியலை வலியுறுத்துகிறார். அவரது உரைகள் மற்றும் எழுத்துக்களில் இந்த அடிப்படை ஆதாரங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

கல்விக்கு முக்கியத்துவம்: 

'இக்ரஃ' எனும் வஹியின் முதல் வழிகாட்டலுக்கு அமைய, அறிவுத் தெளிவு பெற்றவர் எதையும் நுட்பமாக ஆராய்ந்து முடிவெடுப்பார் என்ற கோட்பாட்டுக்கு அமைய இஸ்லாமியக் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யாவில் அரை நூற்றாண்டு காலமாக பணியாற்றிக் கொண்டிருப்பவர் என்ற வகையில், கல்விக்கு இவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். மனிதனின் பகுத்தறிவும், இறை வழிகாட்டலும் இணைந்து செயல்படுவதன் அவசியத்தை இவர் வலியுறுத்துகிறார். கல்வியை மார்க்கக் கல்வி, உலகக் கல்வி என்று கூறுபோட்டு பிரிப்பதை விமர்சிக்கும் இவர் பிரயோசனமான கல்வி,பிரயோசனமற்ற கல்வி என்பதே மிகவும் பொருத்தமானது என்று விளக்குகிறார்.

சமகாலப் பிரச்சினைகளுக்கு இஸ்லாமியத் தீர்வுகள்:

இன்றைய உலகின் சவால்களை இஸ்லாமிய நோக்கில் அணுகி, அவற்றிற்கு அல்-குர்ஆன் மற்றும் ஸுன்னாவின் அடிப்படையில் தீர்வுகள் வழங்க இவர் முயல்கிறார். ஒரு சமூகத்தின் வளம் அச்சமூகம் பெற்றிருக்கும் பௌதீக வளங்களை வைத்துக் கணிக்கப்படுவதில்லை. மாறாக அச்சமூகம் கொண்டுள்ள கருத்துக்கள், சிந்தனைகளை வைத்தே மதிப்பீடு செய்யப்படுகின்றது.

இருபதாம் நூற்றாண்டின் இஸ்லாமிய சிந்தனையின் வீழ்ச்சிக்கான பிரதான காரணம் இந்த முஸ்லிம் சமூகத்தில் நிலவிய சிந்தனைத் தேக்கமே என்பதை மாலிக் பின் நபி (ரஹ்) குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.அந்த வகையில் 

சமூகத்தின் சிந்தனையையும், கவனத்தையும் தூண்டும் வகையில் சமகாலப் பிரச்சினைகளோடு தொடர்புடைய தலைப்புகளில் இவர் பேசுகிறார்; எழுதுகிறார்.

சமூக நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள்

சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் நிலை:

ஒரு சிறுபான்மை முஸ்லிம் சமூகம் பல்லின, பல்சமய சமூகத்தில் எவ்வாறு வாழ வேண்டும் என்பது குறித்து இவர் ஆழமான சிந்தனைகளைக் கொண்டுள்ளார். பிற சமூகத்தவருடனும், சமயத்தவருடனும் பேண வேண்டிய உறவுகள் பற்றி ஷரீஆவின் கண்ணோட்டத்தை இவர் தெளிவுபடுத்துகிறார்.

மனித உரிமைகள்: 

இஸ்லாம் மனித உரிமைகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை இவர் எடுத்துரைக்கிறார். 1789 ஆம் ஆண்டு பிரான்சிய புரட்சிக்குப் பின்னரே மனித உரிமைகள் பற்றிய சிந்தனை உருவானதாகப் பொதுவாகக் கருதப்பட்டாலும், இஸ்லாம் மனித உரிமைகளை வகுப்பதிலும் செயல்படுத்துவதிலும் முன்னோடியாக இருந்ததை இவர் வலியுறுத்துகிறார்.

இஸ்லாத்தில் இன, மொழி, பிரதேச வாதங்களுக்கு இடமில்லை. 'உம்மா' எனும் கோட்பாடே இஸ்லாத்தின் ஆன்மா. இஸ்லாம் இனம், மொழி, நாடு முதலான அனைத்து எல்லைகளையும் கடந்து உலகளாவிய மனித சமுதாயத்தினரை இறையடியார்களாக, சகோதரர்களாகப் பார்க்கிறது. அதேநேரம் இன, மொழி, தேசம் மீதான பற்றுக்கும் உணர்வுக்கும் இஸ்லாம் மதிப்பளிக்கிறது. ஏனெனில்  அது யதார்த்தமானது; மனிதனது இயல்புடனும், மனித சுபாவத்துடனும் ஒத்துச் செல்கிறது. இஸ்லாம் இயற்கையின் மார்க்கமாக (தீனுல் பித்ரா) திகழ்வதே இதற்குக் காரணமாகும் என விளக்குகின்றார்.

தேசப்பற்றின் வெளிப்பாடுகளாக பின்வருவனவற்றை இவர் அடையாளப்படுத்துகின்றார்.

• தேசத்தின் ஜனநாயக விழுமியங்களை மதித்தல்.

• தேசத்தின் சட்ட யாப்பு மற்றும் சட்டம் போன்றவற்றை மதித்தல்;அவற்றுக்குக் கட்டுப்படல்.

• தேசியக் கொடி மற்றும் சின்னங்களை மதித்தல்.

• தேசிய விவகாரங்களில் பங்கேற்றல்.

இக்கருத்துக்களை இவர் தனது 'இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் சிறுபான்மை சமூகமும் நற்பிரஜைத்துவமும்' எனும் நூலில் அற்புதமாக தெளிவுபடுத்துகிறார்.

பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்கள் மேற்கண்ட நூலுக்கு வழங்கிய அணிந்துரையில்,

அண்ணாத்துரை இஸ்லாமிய மாநாடொன்றில் உரையாற்றும் போது "இஸ்லாம் ஓர் உலகளாவிய மதம் மட்டுமன்று; அது ஒரு மார்க்கம்; அது யாவருக்குமுரிய பிரபஞ்ச தத்துவங்களைக் கொண்டது"

என தெரிவித்த கருத்தொன்று இந்த நூலைப் படித்தபோது தனக்குள் ஒரு சிந்தனையாகப் பளிச்சிட்டது" எனக் கூறுகின்றார்.

"மேலும் ஏனைய சமயத்தவரும் தமது சமய சிந்தனைகளின் படியான நற்பிரஜைத்துவ தத்துவங்களை ஆராய இந்நூல் ஒரு பிரதான தூண்டுகோலாக அமையும் அதேவேளை, அவை பற்றிய ஒப்பியல் ஆய்வுகளுக்கும் வழிவகுக்கும் என்பதாகவும் பேராசிரியர் சந்திரசேகரன் கூறியுள்ளார்.

மதச் சகிப்புத்தன்மை: 

உஸ்தாத் அகார் முஹம்மத் முஸ்லிமல்லாதவருக்கு இஸ்லாம் வழங்கும் உரிமைகளையும், வரலாற்று ரீதியாக இஸ்லாமிய ஆட்சியின் கீழ் அவர்கள் நடத்தப்பட்ட விதத்தையும் சுட்டிக்காட்டி, இஸ்லாத்தின் மீதான தவறான குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். முஸ்லிமல்லாத ஒருவருக்கு அநீதியிழைப்பதையோ, அவரது உரிமைகளைப் பறிப்பதையோ இஸ்லாம் கடுமையாக எச்சரிப்பதை நபிமொழிகள் மூலமும், முஹம்மது (ஸல்) அவர்களின் நடைமுறை வாழ்க்கையில் இடம்பெற்ற 

• மதீனா சாசனம் (உடன்படிக்கை)

• நஜ்ரான் தேச கிறிஸ்தவர்களுடனான உடன்படிக்கை,

• யூத சமூகத்தினருடனான பல உடன்படிக்கைகள்

மூலமாகவும் இவர் எடுத்துரைக்கிறார்.

ஆழமான சமூக சிந்தனைகள்:

"இஸ்லாமிய சிந்தனை" சஞ்சிகையின் பிரதம ஆசிரியராக இவர் பணியாற்றுகின்றார். அவற்றில் ஆழமான சமூக சிந்தனைகளைத் தூண்டும் வகையிலான ஆசிரியர் கருத்துக்களை எழுதிவருகின்றார்.

மேலும் இவரது ஆழமான சிந்தனைகளை அறிவதாயின் இவரால் எழுதப்பட்ட நூல்களான;

1 - சன்மார்க்க சட்ட விளக்கங்கள்

2 - மறைவழி: அல்குர்ஆன் விளக்கங்கள்

3 - நபி வழி: ஹதீஸ் விளக்கவுரை - பாகம்1

4 - நபி வழி: ஹதீஸ் விளக்கவுரை - பாகம் 2

5 - பெண்கள் தொழில் புரிதல்: சில வழிகாட்டல்கள்

6 - வர்த்தகம்: ஹலாலும் ஹராமும்

7 - கல்வி, கற்றல், கற்பித்தல்: ஓர் இஸ்லாமிய நோக்கு (இஸ்லாமிய ஆசிரியர்கள், அழைப்பாளர்களுக்கான ஒரு வழிகாட்டி)

8 - இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் சிறுபான்மை சமூகமும் நற்பிரஜைத்துவமும்

9 - மிம்பர் மேடை

10 - සාමය කරා:   සාම පිළිබඳ ඉස්ලාමීය දැක්ම

11 - ஹலால்,ஹராம் விதிமுறைகளும் உணவு,உடை வரையறைகளும்

12 - வட்டி: ஓர் இஸ்லாமிய அணுகல்

13 - நாளும் ஓத நபிகளாரின் திக்ருகள்

14 - சமாதானத்தை நோக்கி

15 - 100 வாழ்க்கைப் பாடங்கள் 

(இன்ஷா அல்லாஹ்,இன்று வெளியீடு செய்யப்படவிருக்கும்  நூல்)

போன்ற நூல்களை வாசிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

"இஸ்லாமிய சிந்தனை", "அல்ஹஸனாத்" போன்ற சஞ்சிகைகளிலும், "தினகரன்" போன்ற தேசிய நாளிதழ்களிலும் இவரது பல நூறு கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

அவற்றை வாசிப்பதன் மூலமும் புரிந்து கொள்ளலாம்.

ஒன்லைன் பிரசன்னம்:

இலங்கையின் முஸ்லிம் அறிஞர்களில் தனக்கெனப் பிரத்தியேகமான இணையதளத்தைக் கொண்ட முன்னோடியாக இவர் விளங்குகின்றார்.

இவரது முகப் பக்கமும் இவரது சிந்தனைகளை சமூகமயப்படுத்தி வருகின்றன. 

Facebook: Ash-Sheikh Agar Muhammed

YouTube: Ash-Sheikh A.C Agar Mohamed

சுருக்கமாக, உஸ்தாத் ஏ.சி. அகார் முஹம்மத் அவர்களின் சிந்தனைகள் கல்வி,சமூக ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், மனித உரிமைகள் மற்றும் நவீன உலகின் சவால்களுக்கு இஸ்லாமியத் தீர்வுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன என்று குறிப்பிடலாம்.

இன்றைய "100 வாழ்க்கைப் பாடங்கள்" நூல் வெளியீட்டு நிகழ்வுகள் யாவும் வல்லவன் அல்லாஹ்வின் மாபெரும் அருளினால் சிறப்பாக நடைபெற்று முடிய உயர்ந்த பிரார்த்தனைகளுடன், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

✍️ தேடல்: நௌபாஸ் ஜலால்தீன் 

Muhammed Nowfas

உஸ்தாத் அகார் முஹம்மத் அவர்களின் சன்மார்க்க, சமூகப் பணிகளை மிகவும் சுருக்கமாக எடுத்துக்கூறும் காணொளி.

Biography of Usthaz Agar Muhammad


Azeef Ameer 👇 
Facebook: Azeef Ameer
Instagram: Azeef Ameer
YouTube: Azeef Ameer
Telegram: Azeef Ameer
WhatsApp: Azeef Ameer
Gmail: ameeraazeef2001@gmail.com

Comments

Popular posts from this blog

நூல் அறிமுகம் - 05