நூல் அறிமுகம் - 05

 📖 அல் குர்ஆனிய வாழ்வைச் சுமந்த இறைதூதர் ﷺ

✍️ எழுத்தாளர்: கலாநிதி அஷ் ஷெய்க் அரபாத் கரீம் (நளீமி)

📚 வெளியீடு: நொலேஜ் பதிப்பகம் 

Knowledge Publication

 بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ

رَبَّنَا لَكَ الْـحَمْدُ مِلْءَ السَّمَاوَاتِ وَمِلْءَ الْأَرْضِ وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ وَصَلَاةً وَسَلَامًا عَلَى مَنْ أَرْسَلْتَهُ رَحْمَةً لِّلْعَالَمِينَ وَحُجَّةً عَلَى النَّاسِ أَجْمَعِينَ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ وَمَنِ اتَّبَعَهُمْ بِإِحْسَانٍ إِلَى يَوْمِ الدِّينِ أَمَّا بَعْدُ

அண்ட சராசரங்கள் படைத்தவனே, விண்ணும் மண்ணும் விரித்தவனே, ஆழ்கடல் தந்தவனே, உன் முன் விழுந்தெழுந்து சுஜூத் செய்து இந்த வரிகளை துவக்குகிறேன்.

விண்ணகமும் மண்ணகமும் வாழ்த்தொலிக்க வந்துதித்த சத்தியத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அண்ணவர்களின் வழி நடந்த நன்னெறியாளர்கள் மீதும் அல்லாஹ்வின் அருளும் சாந்தியும் என்றென்றும் நிலைக்கட்டும் என்றும் பிரார்த்தித்துக் கொள்கின்றேன். 

தலைமை பீடத்திற்கு கௌரவப் பூக்களை சமர்ப்பிப்பதில் சந்தோசிக்கிறேன். அவையை அலங்கரிக்கும் அறிவுசால் ஆளுமைகளே, இதயம் நிறைந்த சோதரர்களே, இனிய நேசங்களே, அன்பின் சோதரிகளே. சுவனத்தின் சுகந்தத்தை சுமந்து வரும் இனிய ஸலாம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

எங்கள் நெஞ்சங்களில் வாழும் அறிவுத்தந்தை மர்ஹூம் அல்ஹாஜ் நளீம் கட்டித் தந்த தங்கத் தொட்டிலில், என்னைப்போலே கண் உறங்கி தவழ்ந்து வளர்ந்து ஆளுமையாக மாறிய அருமை சகோதரர் அரபாத் கரீம், இந்த பேருவளை மண் கண்ட நல்லதோர் ஆளுமை. “அல் குர்ஆனிய வாழ்வை சுமந்த இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்” என்ற இந்த பொக்கிஷத்தை உலகுக்கு தந்த, இந்த மண்ணின் மைந்தன். வறண்டு போயிருந்த மக்காவின் பாலை நிலங்களில் பெருமழையாய் இறங்கி, செந்தாமரையாய் பூத்தெழுந்த சத்திய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நான்கு அத்தியாயங்களில் இந்த நூல் சொல்லி இருக்கிறது. ஒரு வகையில், இது நூல் அல்ல. ஹிராவின் பேரொளிப் பிளம்பில் பூத்தெழுந்த தாமரை. அதன் ஒவ்வொரு இதழ்களாய் பிடுங்கி வந்து அதன் நறுமணத்தை என்னிடம் சொல்லச் சொல்லி இருக்கிறீர்கள். பௌர்ணமியின் நிலாக்கரணங்களைப் பிடித்து வந்து தோரணம் கட்டி தொங்க விடுங்கள் என்று சொல்லியிருப்பினும் செய்திருப்பேன். சமுத்திரக் கரையில் கொட்டிக் கிடக்கும் நுரைகளை அள்ளி கணக்கிட்டுச் சொல்லுங்கள் என்று சொன்னாலும் செய்திருப்பேன். எங்கள் இதயங்களில் வாழும் ரஹ்மத்துன்லில் ஆலமீனின் அருளை அல்லவா சொல்லச் சொல்கிறீர்கள். எப்படிச் சொல்லி முடிப்பேன்? முயற்சித்துப் பார்க்கிறேன்.

அணிந்துரை

“ஸீரா ஒரு தனிமனிதனின் வரலாறு அல்ல. அது பிரபஞ்சம் தழுவிய புனித வாழ்வு. இந்த பூமியின் கடைசித் தருணத்தில் இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருக்கும் மனிதனின் மூச்சிலும் நிறைந்து வாழ வேண்டிய அற்புத வாழ்வு. அந்த வாழ்வு மதீனா பூமியின் புனித மண்ணுக்குள் மறைந்து போய்விட முடியாது”. இந்த உண்மையை அணிந்துரையில் சொல்கிறார், ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் கல்வித்துறைப் பணிப்பாளர் மதிப்புக்குரிய என் ஆசான் உஸ்தாத் ஐயூப் அலி அவர்கள்.

யுக முடிவு நாள் வரை நிலைத்திருந்து மனித சமூகத்திற்கு நேர்வழிகாட்டக்கூடிய ஒளிவிளக்காக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ஸீரா காணப்படுகிறது. ஒவ்வொரு காலத்து மனிதர்களுக்கும் வாழ்வியல் தத்துவங்களையும் படிப்பினைகளையும் வழங்கும் வல்லமை அதற்கு இருக்கிறது. ஸீரா  பிரபஞ்சம் தழுவிய புனித வாழ்வு என்பதனை இந்த அணிந்துரையில் உஸ்தாத் அழகாகச் சொல்லி இருக்கிறார்.

Usthaz C. Aiyoob Ali (Naleemi)

முன்னுரை

“உத்தம நபியின் புனித வாழ்வைப் பேசும் ஏராளமான நூல்கள் உண்டு. அரபு மொழியில், ஆங்கில மொழியில், தமிழ் மொழியில் என அடுக்கைகளில் அடுக்கி வைக்கும் அளவுக்கு புத்தகங்கள் உண்டு. அந்த வகையில் இதுவும் ஒன்றா? இல்லை, இது என் இதயத்து ஓசை”. அடித்துச் சொல்கிறார் சகோதரர் அரபாத் கரீம் முன்னுரையில்.

“அல் குர்ஆனைப் படிக்கின்ற போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அதிகூடிய முக்கியத்துவம் என்னை சிந்திக்க வைத்தது. அல் குர்ஆன் வழங்கியுள்ள பிரமாண்டமான இடம் அவர்களைப் பிரத்தியேகமாக ஆராய வேண்டும் என்ற உணர்வை எனக்குள் தந்தது. எனவே, சம்பிரதாயபூர்வமாக அவர்களை அறிமுகப்படுத்துவதை தாண்டி, நாம் வாழும் இன்றைய சூழலுக்கேற்ப ஸீராவை அறிமுகம் செய்யவும், இறைத்தூதரின் வாழ்வின் பிரதான செய்திகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவாவும் இம்முயற்சிக்கு உடனடிக் காரணியாகியது”. யதார்த்தமான வரிகள். இதயமே அங்கு வந்து நின்று பேசுவது போல் இருக்கிறது. சகோதரர் அரபாத் கரீமின் முன்னுரையே இந்த செந்தாமரையின் முதல் நறுமணம்.

அல்லாமா சுலைமான் நத்வி, சம்பிரதாயபூர்வ ஸீரா எழுதுகையை தவிர்த்த உருது மொழியின் சிகரம் தொட்ட ஆய்வாளர். “ஸீரத்துன் நபி” அவரது நூல்களில் தலையாயது. கலாநிதி முஹிய்யுத்தீன் அஹ்மதின், Muhammad, The Ideal Prophet என்ற தலைப்பில் எட்டு அத்தியாயங்களில் சொல்லி இருப்பார். அந்த நூலின் முன்னுரையில் சொல்லும் கருத்தின் சாயலை கலாநிதி அரபாத் கரீமின் முன்னுரையிலும் காண்கின்றேன்.

Dr Ash Sheikh Arafath Careem (Naleemi)

அத்தியாயம்: 01

இந்த நூலின் முதல் அத்தியாயம் இப்படி விரிகிறது. “அல் குர்ஆனின் ஒளியில் இறைத்தூதர் ﷺ”. இந்த நூலின் மையப்புள்ளியும் அதுதான். அல் குர்ஆன் இந்த பிரபஞ்சம் கண்ட ஒரு அழகிய கனவு. அந்த கனவை சுமந்து இந்த மண்ணுக்கு வந்து வாழ்ந்த சத்தியத் தூதரின் கனதியே, அவர்களின் பணியின் மகிமையை, அவர்களின் வழிகாட்டலின் பெருமையை, இந்த அத்தியாயம் பேசி இருக்கிறது. 

இறுதித் தூதரின் மக்காப் பிறப்பு, அகிலத்தோனின் ஒரு அருட்கொடையாக அமைந்தாலும் கூட, அது ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, ஸஃபா மலையின் இடுக்கிலிருந்து ஒலித்த, இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குரல். அவர்களின் விரல்களின் இடுக்குகளுக்கு இடையே ஓடி வந்து, ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஹிரா மலையில் இறங்கிய பேரொளிப் பிளம்பின் ஊற்றே.

அது ஒழுக்கமாய், விழுமியமாய், பண்பாடாய், மழைச்சாரலாய் அந்த மணல் தரையில் வந்து விழுந்தது. ஒழுக்கம், விழுமியம், பண்பாடு என்பவற்றை இழந்து பட்டுப்போயிருந்த மனித மரங்களை அது துளிர்க்கச் செய்தது. இந்த உண்மையை இந்த அத்தியாயத்தின் 25 ஆம் பக்கத்தில் அழகுறச் சொல்கிறார்.

வாழ்வின் இலட்சியத்தை மனித சமூகத்துக்கு அறிமுகம் செய்து சிறந்த வாழ்வை மேற்கொள்வதற்கு வழிகாட்டுவதற்காக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள். வாழ்வின் இலக்கு தெரியாது, ஷிர்க்கிலும் அனாச்சாரங்களிலும் மூழ்கி, உலக வாழ்வின் நற்பயன் இன்பங்களை அனுபவித்துக் கொண்டிருந்த ஒரு சமூகத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்வு பற்றிய தெளிந்த பார்வைகளுடன் கூடிய சிறந்த ஒழுக்க விழுமியங்கள் கொண்டதாக உருவாக்கினார்கள். எத்தனை யதார்த்தமான உண்மை. அழகான வரிகளில் அந்த உண்மையைச் சொல்ல, 19 தொடக்கம் 64 பக்கங்கள் வரை 20 உப தலைப்புகளில் இந்த சிந்தனையை விளக்கி இருக்கிறார். ஆழமான நோக்கு, அழகான அணுகல்.

உண்மையில் என் கடிகார முள் மட்டும் எச்சரிக்காமல் இருந்திருப்பின், இந்த ஒவ்வொரு தலைப்பு பற்றியும் ஒரு ஐந்து நிமிடம் சொல்லியிருப்பேன். இதயத்தைத் தொடும் வகையில், அல் குர்ஆனின் ஒளியில் உத்தம நபிகளாரின் உன்னதப் பண்புகள், அல் குர்ஆனின் ஒளியில் பிரகாசிக்கின்ற அழகைச் சொல்கிறார்.

வானத்து நட்சத்திரங்களை கணக்கெடுத்து விடலாம். அவற்றின் ஒளி கிரணங்களின் எண்ணிக்கையை கூட சொல்லி முடித்து விடலாம். ஆனால், பூமியில் வாழும் அல் குர்ஆனின் மகத்துவத்தை, பூமியில் நடந்து திரிந்த அல் குர்ஆனின் மகத்துவத்தை, அது வாழ்ந்து காட்டிய மகோன்னதத்தின் உன்னதத்தை எப்படி வார்த்தைகளுக்குள் அடக்கி முடிப்பது? அங்கே அரபாத் கரீமின் பேனா மட்டுமல்ல, அதன் வரலாற்றை எழுத விழைந்த ஒவ்வொரு பேனாவும் தோற்றுத்தான் போனது.

சுவனத்தில் வாழ வேண்டிய சூரியனின் கிரணங்களுக்கு இந்தப் பூமியில் யார்தான் மையடிக்க முடியும்? அந்த யதார்த்தத்தை சகோதரரின் இந்த அத்தியாயம் எனக்குச் சொல்லி இருக்கிறது. “அல் குர்ஆனின் ஊடாக இறைத்தூதர் அவர்களது பயணத்தை வாசித்தல்” என்ற பகுதியை மட்டும் படித்துப் பாருங்கள். இதயத்துக்குள் ஏதோ வந்து அடித்துக்கொள்வது போல் இருக்கும். 

அருமை சகோதரர் அரபாத் கரீம், உங்கள் பேனா வாழ்க. இறைத்தூதர்கள் இந்தப் பூமிக்கு வந்தார்கள், வாழ்ந்தார்கள், வளப்படுத்தினார்கள், மகோன்னதர்களை கூட படைத்தார்கள். அவர்கள் அனைவரையும் அல் குர்ஆன் வாழ வைத்திருக்கிறது. ஆனால், அகிலம் தந்தவனின் அற்புதத் தீர்ப்பு எவ்வளவு அழகானது? தன் இறுதி வேதத்தையே வாழ்வாக ஆக்கிய விந்தையை, ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வில் அல்லவா மட்டும் சந்திக்கின்றோம்.

சத்தியமாக, ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாற்றில் வாழவில்லை. அவர்களில் ஒரு வரலாறே வாழ்கிறது. அல் குர்ஆனில் அவர்கள் வாழவில்லை. அல் குர்ஆனே அவர்களில் வாழ்கிறது என்பதனை இந்த அத்தியாயம் அடித்துச் சொல்லியிருக்கிறது.

அத்தியாயம்: 02

இரண்டாவது அத்தியாயம், “இறைத்தூதரின் வாழ்வில் ஒரு நாள்”. உண்மையில், இந்த தலைப்பை சகோதரர் எப்படி தெரிவு செய்தார்? ஒர் அழகிய தலைப்பு. அகிலம் தந்தவனின் தூதராக, குடும்பத்தின் தலைவனாக, அரசு இருக்கையை அலங்கரிக்கும் அரசனாக, ஒரு ஏழையின் காவலனாக, களங்களில் கொடியேந்தும் வல்லவனாக, ஏழைகளின் அபயமளித்துக் காப்பவராக, பண்பாடுகளின் சிகரமாக, சுஜூதுகளில் கண்ணீர் விட்டழும் அல்லாஹ்வின் உண்மை அடியானாக, சத்திய தூதரின் ஒவ்வொரு நாளும் எப்படி கழிந்தது? இந்த அத்தியாயம் அழகாகச் சொல்லியிருக்கிறது.

ஸீராவை இப்படி எழுதியவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று படிக்கும் போது, 20-ஆம் நூற்றாண்டின் எகிப்து தந்த ஆளுமை, காலித் முஹம்மத் காலித் அவர்களை சந்திக்கின்றோம். ஏராளமான ஸீரா நூல்களை தந்த மகத்தான ஆளுமை. அந்த நூல்கள் பற்றி எல்லாம் சுருக்கம் கருதி பேசவில்லை, விரிவை தவிர்த்திருக்கிறேன். ஆனால், தமிழில் இப்படி ஒரு நூல் இதுவரை வரவில்லை.

சகோதரர் அரபாத் கரீம், அதன் இலக்கை இப்படி சொல்கிறார்: "இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை பற்றிய ஆய்வில், அவர்கள் ஒவ்வொரு நாளையும் எப்படி கழித்தார்கள் என்பது முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய அனைத்து பண்புகளையும் கொண்டிருந்த ஒரு உயர்ந்த தூதராக அவர்கள் விளங்கினார்கள். இத்தகைய முழுமையான முன்மாதிரி கொண்ட தூதரின் ஒரு நாள் வாழ்வு எப்படி அமைந்திருக்கும் என்பதனை தெரிந்து கொள்ள உள்ளங்கள் எப்போதும் ஆர்வம் கொண்டிருக்கும். நபிகளாரின் அன்றாட வாழ்வை எமது வாழ்வில் பிரயோகித்துப் பார்க்கவும், அதன் ஊடாக இறைத்திருப்தியையும், அவர்களது நேசத்தையும் பெற்றுக் கொள்ளவும் நாம் எத்தனிப்பதற்கு, இந்தப் பெருவாழ்வு உதவ முடியும்" என சொல்லி இருக்கிறார். அழகான வரிகள்.

பக்கம் 65 தொடக்கம் 82 வரை படித்து முடிக்கும் போது, இதயத்தில் ஒரு குரல் ஓங்கி ஒலிக்கிறது. சத்தியத் தூதரின் உயரிய வாழ்வு ஒரு தனிமனிதனின் வாழ்வு அல்ல. அகிலத்தின் முதல் மனிதனாய், இறுதித் தூதை சுமந்த முதல் ஆளுமையாய் பூமிக்கு வந்து வாழ்ந்த ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதல், இந்த மண்ணிலிருந்து விடைபெற்ற ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வரை, எத்தனை நபிமார்கள் இந்த வாழ்வில் வந்து வாழ்ந்தார்களோ, இந்த பூமியில் வந்து மனிதர்களாக வாழ்ந்து நபிமார்களாக திகழ்ந்தார்களோ, அந்த அத்தனை நபிமார்களதும் வாழ்வின் முற்றுப்புள்ளியே இந்த வாழ்வு என்பதனை இந்த அத்தியாயத்தை படிக்கும்போது உணர முடிகின்றது.

அழகான கருத்துகள். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆன்மீக வாழ்வு, அவர்களின் சமூக வாழ்வு, இறை தியானங்கள், இஸ்லாமியப் பிரச்சாரப் பணி, இந்த ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாள் பணிகளில் எப்படி இருந்தது என்பதனை ஆழமாக, அகலமாக சொல்லி இருக்கிறார். 

Organized By: China Fort Knowledge Forum & Manarath Ladies Forum 

அத்தியாயம்: 03

“இறைத்தூதர் காட்டிய ஒழுக்கநெறி” - மூன்றாவது அத்தியாயம். இந்த அத்தியாயத்தில் இப்படிச் சொல்கிறார்: "ஒழுக்கப் பெறுமானங்கள் முற்றிலும் தலைகீழாக மாற்றம் பெற்றுள்ள சமகால உலகில், மனித விழுமியங்களைப் பாதுகாக்க ஒழுக்கத்தின் பங்கும், அன்று அதன் இன்றியமையாத தேவை குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும். அதற்காக வேண்டி, ஒழுக்கத்தின் சிகரத்தை தொட்ட உன்னத மனிதரின் பண்பாட்டு வாழ்வை உலகுக்கு சமர்ப்பிப்பது காலத்தின் தேவையாக உள்ளது" எத்தனை யதார்த்தமான வரிகளில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒழுக்க வாழ்வின் அவசியம் பற்றி சொல்கிறார்.

13 - ஆம் நூற்றாண்டு தந்த விஞ்ஞான மேதை, ஷாதுலியா தரீக்காவைச் சார்ந்த ஆன்மீக செம்மல், இமாம் பூஸரி ரஹிமுல்லாஹ் அலைஹி அவர்களுடைய கஸீதத்துல் புர்தாவில் 37, 57 ஆம் பைத்துக்களில் ஒரு பாடல் வரும்.

فَاقَ النَّبِيِّينَ فِي خَلْقٍ وَفِي خُلُقٍ 

وَلَمْ يُدَانُوهُ فِي عِلْمٍ وَلَا كَرَمٍ

மண்ணுக்கு வந்த மாநபிகள் அனைவரிலும் மேம்பட்டுத் திகழ்ந்தார்கள் உயர் நபிகள் கோமான். நல்வடிவில், நற்குணத்தில், பெருந்தன்மை, நல்லறிவில், நபிமார்கள் எவருக்குமே நெருங்கி வர முடியவில்லை.

أكرِمْ بخُلُقِ نبيٍّ زانه خُلُقٌ

بالحُسنِ مُشتملٍ بالبِشرِ مُتَّسِمِ

மேன்மை மிகு நபிமேனி நற்குணங்கள் அலங்கரிக்கும். நிறைவான நல்லழகும் மலர்ந்த முகப்பொலிவிலும் எங்கனுமே பரந்திருக்கும். அந்த மகானின் வர்ணனைகள், அந்த நபி மீது கொண்ட அற்புத ஆளுமையின் மீது கொண்ட ஈர்ப்பு, அந்த பண்பாட்டில் கண்ட திளைத்த தன்மை, இந்த அத்தியாயத்தின் ஐந்து உப தலைப்புகளிலும் அழகாக இலையோடி இருக்கிறது. அழகிய  அணுகல், எளிகிய விளக்கம். ஒரு நற்குணப் பூங்கா இந்த அத்தியாயம் எங்கும் விரவி இருப்பதனை நீங்கள் காணலாம்.

அத்தியாயம்: 04

இறுதி அத்தியாயம், “இன்பத்திலும் துன்பத்திலும் இறைத்தூதர்”. நான் இதுவரை படித்த ஸீரா நூல்களில் காணாத ஒரு வித்தியாசமான தலைப்பு. துயரப் புயல்கள் தன்னை தூக்கி எறிந்த போதும், இன்ப மாருதம் தன் முகம் தழுவி அரவணைத்த போதும், சற்றும் மாறாமல் புன்னகை பூத்து வாழ்ந்த உத்தம நபியின் அழகிய வாழ்வை இந்த அத்தியாயம் பேசி இருக்கிறது.

ஒரு இன்பத்தையும், ஒரு துன்பத்தையும் மட்டும் உதாரணத்துக்காக காட்டுகிறேன். 94 ஆம் பக்கத்தில், கஃப் இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், தபூக் யுத்தத்திற்குப் போகாமையின் காரணமாக தண்டிக்கப்பட்டு பின்னர் மன்னிக்கப்பட்டதனை கேட்ட ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனோநிலையை விளக்கும் ஒரு பகுதி இது.

"இது அல்லாஹ்விடம் இருந்து வந்தது" என்று கூறியவுடன், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். நபி அவர்கள் அவ்வாறு மகிழ்ச்சி அடைந்தால், அவருடைய முகம் ஒளிர்வடையும். அது நிலவின் துண்டைப் போன்று பிரகாசித்துவிடும். அது இன்பத்தில் நபி. துன்பத்தின் போது, இப்ராஹீம் எனும் நபி அவர்களின் அன்பு குழந்தை பிரிந்த போது, "கண்ணோ கண்ணீர் வடிக்கிறது, உள்ளம் கணக்கிறது. இப்ராஹீமே, உன் பிரிவுத் துயரால் நாம் கவலைப்படுகிறோம். என்றாலும், எம் இரட்சகனுக்கு திருப்தி அளிப்பவற்றை மட்டுமே கூறுகிறோம்" என்ற சத்தியத் தூதரின் ஆன்மா பேசிய வரிகளை சகோதரர் அரபாத் கரீம் பதிவு செய்திருக்கிறார்.

படிக்கும்போதெல்லாம் இதயத்தை ஒருபுறத்தில் அடைத்துக்கொண்டும் மறுபுறத்தில் அரவணைத்துக்கொண்டும் செல்லும் நல்லதொரு அத்தியாயம். பேராசிரியர் வஹீதுத்தீன் கான், எம் இதயக் கொழுந்தை, ஆங்கில உலகுக்கு அறிமுகப்படுத்திய நல்லதொரு ஆசான், “Muhammad: The Prophet of Revolution” என்பது நான்கு பாகங்கள் கொண்டு 17 அத்தியாயங்களில் அவர் எழுதிய ஒரு நூல். அதன் இறுதி அத்தியாயம் இப்படி அமையும்: “Manifestation of Prophethood in the Present Day and Age”. இந்த அத்தியாயத்தை படித்த போது, அந்த அத்தியாயத்தின் சாயல் என் இதயத்தே எழுந்தது.

அருமை சகோதரர்களே, கடிகாரமுள் என்னை எச்சரித்து நிறுத்துகிறது. கடைசியாய் ஒன்றைச் சொல்கிறேன். இந்த அத்தியாயத்தை நான் படித்து முடித்த போது ஒன்றை அனுபவித்தேன். சமுத்திரக் கரையில் நிற்கும் கலங்கரை விளக்கம் இது. கடலில் திக்கத் தெரியாமல் தடுமாறித் தறவும் மரக்கலங்களைக் கைசேர்த்து கரை சேர்க்கும் ஒரு மீகாமன் இந்த நூல்.

அருமை சகோதரர்களே, இந்த நூல் இலங்கை மண்ணின் ஒவ்வொரு மைந்தனின் கையிலும் இருக்க வேண்டும். சிங்கள மொழியிலும் கூட இந்த நூல் தேவை. இன்ஷா அல்லாஹ், இந்த நிகழ்வின் அனுசரணையாளர்கள் எதிர்காலத்தில் சிங்கள மொழியிலும் இதனைக் கொடுக்க ஆவன செய்யுங்கள்.

மாணிக்கங்களை மகுடமாய் சூடும் பேருவளையின் என் உடன்பிறப்புகளே, உங்களைப் பார்க்கும் போது நான் பூரித்துப் போகிறேன். உங்கள் சகோதரன் அரபாத் கரீமுக்காக மட்டும் இங்கே நீங்கள் இன்று தோரணம் கட்டவில்லை. எங்கள் இதயங்களில் வாழும் சத்தியத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் சேர்த்து ஒரு தோரணம் கட்டியிருக்கிறீர்கள். இந்த நூலை நீங்கள் உண்மையில் இன்று வெளியிடவில்லை, கொண்டாடி இருக்கிறீர்கள்.

வல்லவன் ரஹ்மான் உங்கள் அனைவர் மீதும் அருள்மாரி பொழியட்டும். இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். சகோதரன் அரபாத் கரீமின் பேனா இதைவிடத் தர வேண்டும், இன்னும் தர வேண்டும், ஏராளம் தர வேண்டும். இந்த மண்ணும் மனிதர்களும் அதனால் மாற வேண்டும், மணக்க வேண்டும். எதிர்கால தலைமுறையில் வாழும் சின்னஞ்சிறு சிறார்களின் இதயத்தில் ஸீரா வாழ வேண்டும், மூச்சாக வேண்டும், நடக்க வேண்டும். ஆசை, கனவு, அவா.

وَآخِرُ دَعْوَانَا أَنِ الْـحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِينَ 

 اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللّٰهِ وَبَرَكَاتُهُ

நூல் அறிமுகம் பற்றிய முழுமையான காணொளியை பார்வையிட 👉 Click Here

🎙️ Ash Sheikh Nawas Sanoordeen (Naleemi)

Ash Sheikh Nawas Sanoordeen (Naleemi)

✍️ #azeef_ameer

Azeef Ameer & Dr Arafath Careem 

Azeef Ameer 👇 
Facebook: Azeef Ameer
Instagram: Azeef Ameer
YouTube: Azeef Ameer
Telegram: Azeef Ameer
WhatsApp: Azeef Ameer
Gmail: ameeraazeef2001@gmail.com



Comments

Popular posts from this blog

ஆளுமை அறிமுகம் - 02