நூல் அறிமுகம் - 01

📖 அல்குர்ஆன் சொல்லும் செய்திகள்

✍️ முஹம்மத் இம்தியாஸ் (நளீமி)


அல்லாஹ்வின் வாக்கு பிழையோ சிக்கலோ அற்றது எனினும் அதைக் குறித்த மனித புரிதல்கள் குறைகளும் பிழைகளும் கொண்டவை. எனவே தான் வரலாற்றில் ஆயிரக்கணக்கான திருக்குர்ஆன் விளக்கவுரைகள் தோன்றிய வண்ணம் இருக்கின்றன.

1980 ல் பாலஸ்தீனில் பிறந்து பின்னர் லெபனானுக்கு புலம் பெயர்ந்து அங்கு கல்வி பயின்று, லெபனான் பல்கலைக்கழகத்தில் அரபு இலக்கியத்தில் முதுமானி பட்டத்தை பெற்ற "அத்ஹம் ஷர்காவி" அவர்களால் அரபு மொழியில் எழுதப்பட்ட "ரஸாஇல் மினல் குர்ஆன்" எனும் நூலையே ஜாமிஆ நளீமியா கலாபீடத்தின் அடிப்படை கற்கைகள் பிரிவு தலைவர் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்களில் ஒருவருமான என்றும் மதிப்பிற்குரிய ஆசான் அஷ்ஷெய்க் முஹம்மத் இம்தியாஸ் (நளீமி) அவர்கள் 
"அல்குர்ஆன் சொல்லும் செய்திகள்" என்று தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

அல்குர்ஆன் சொல்லும் செய்திகள்
அல்குர்ஆன் சொல்லும் செய்திகள்


பாலஸ்தீனை பிறந்தகமாகக் கொண்ட "அத்ஹம் ஷர்காவி" இளம் எழுத்தாளர். தனது எழுத்துக்களின் மூலம் வாசகர்களை தன் பக்கம் இலகுவாக ஈர்த்து விடுகிறார். அரபுலகில் இவரது புத்தகங்கள் அதிகமான வரவேற்பை பெற்று வருகின்றன. இவரது நூல்கள் பல மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சிக்கலற்ற எளிமையான எழுத்து முறைமைக்கு சொந்தக்காரர்.

கலாநிதி அத்ஹம் ஷர்காவி
அத்ஹம் ஷர்காவி
د. أدهم شرقاوي
மொழிபெயர்ப்பாளரை பொருத்தவரையில் தனது பாடசாலை கல்வியை கொழும்பு ஸாஹிரா கல்லூரியிலும் பின்னர் தனது உயர் கல்வியை ஏக காலத்தில் பேருவலை ஜாமிஆ நளீமியா கலாபீடத்திலும் பேராதனை பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார். அரபு மொழி வாசிப்பு மற்றும் எழுத்து துறையில் அதிக அக்கறை செலுத்தி அரபு மொழியில் தன்னுடைய முதுமானி பட்டத்தை  மலேசியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டார்.

Ash-Sheikh M.J.M. Imthiyaz (Naleemi)
"இதயங்களுடன் பேசுகிறேன்", "பிரச்சனைகளை கொஞ்சம் தள்ளி வைப்போம்", "சிறைப்பட்ட நிலமும் ஊனமுற்ற தேசமும்; ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் உரிமைகளை பேசும் மொழிபெயர்ப்பு கவிதைகள்", "தஃவா பிரதிகள்: பாதையின் இடையே" உள்ளடங்களாக இன்னும் பல நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
"அல்குர்ஆன் சொல்லும் செய்திகள்" எனும் நூலைப் பொறுத்தவரையில் அல்குர்ஆனை ஆழ்ந்து படிக்கும் ஒவ்வொருவருக்கும் பிரயோசனமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த நூலை தப்ஸீர் என்று பார்க்காமல் ஒவ்வொரு வசனத்தையும் ஓதும்போது எழுத்தாளருக்குள் பிறந்த சில சிந்தனைகள் என்று பார்ப்பது பொருத்தம் என்று கருதுகின்றேன்.

இந்நூலில் புனித அல்குர்ஆனில் ஸூரா கலம் எனும் அத்தியாயத்தின் 32 வது வசனத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கம் என்னை மிகவும் கவர்ந்தது.

"عسى ربنا ان يبدلنا خيرا منها"
(سورة القلم: 32)
"எங்களது ரட்சகன் இதைவிட மேலான ஒன்றை எமக்கு மாற்றித் தரக்கூடும்"
(ஸூரா கலம்: 32)

விளக்கம்: "உங்களை விட்டும் தவறிய சந்தர்ப்பங்களுக்காக நீங்கள் உங்களுக்குள்ளேயே வெந்து எரிந்து கொண்டிருக்கையில், இந்த வசனத்தின் மூலம் உங்களுக்குள் எரியும் நெருப்பை அணைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் இழந்த தொழிலுக்காக, பாதையின் நடுவே உங்களை விட்டுச் சென்ற நீங்கள் அதிகம் நேசித்தவரின் துரோகத்துக்காக, எவ்வளவு தூய்மையான நண்பன் என்றெண்ணி நீங்கள் பழகியதன் பின்னர், இதுவெல்லாம் வெறும் வேஷம் என்று புரிந்து கொண்ட தருணம்... உங்களுக்குள்ளேயே நிச்சயம் நெருப்பொன்று எரிந்திருக்கும். அதனை இவ்வசனத்தின் மூலம் அணைத்துக் கொள்ளுங்கள்.
இறைவன் உங்களுக்குக் கிடைக்காமல் எடுத்துக் கொண்டதில் அவன் மாத்திரம் அறிந்த ஒரு விடயம் இருக்கும். அதனை உங்களால் புரிய முடிகிறது என்றால், இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். அதனை உங்களால் புரிய முடியாமல் இருக்கிறது என்றால்,பொறுமையோடு இருங்கள். உங்களுக்குள் வலிகளை ஏற்படுத்தினாலும் இறைவனின் நியதிகள் அனைத்துமே சிறந்தவைதான்."

இந்த உலகில் எதுவும் அர்த்தம் இன்றி நிகழுவதில்லை. ஒவ்வொரு நிகழ்வும், ஒவ்வொரு அனுபவமும் ஏதோ ஒரு பயிற்சியைக் கூறுகிறது. இவற்றின் பின்புலத்தை உணர்ந்து, மனிதனின் வாழ்க்கை எப்படி சீர்படுத்தப்படவேண்டும் என்பதை கற்றுத் தரும் அற்புத வழிகாட்டியாக அல்லாஹ் நமக்கு புனித அல்குர்ஆனை தந்திருக்கிறான்.

இப்புத்தகம், "அல்குர்ஆன் சொல்லும் செய்திகள்", இதற்குப் பிரதிபலிப்பாக செயல்படுகிறது. இதில் குறிப்பிட்ட செய்திகளின் வழியாக மனித வாழ்வின் உண்மையான நோக்கத்தைப் புரிந்து கொள்ள நமக்குத் தேவைப்படும் அறிவையும், ஆன்மீகத்தையும் விளக்குகிறது. ஒவ்வொரு அத்தியாயமும் எளிய தமிழில் அல்குர்ஆனின் ஒளியை எடுத்துரைக்க உதவுகிறது, நம் தினசரி வாழ்வில் அவற்றை எவ்வாறு நம் செயல்களில் இணைக்கலாம் என்பதையும் உணர்த்துகிறது.

இப்புத்தகத்தில் குர்ஆனின் ஒவ்வொரு வசனத்திற்கும் வழங்கப்பட்டுள்ள விளக்கவுரை அல்குர்ஆனின் உன்னத செய்திகளை எளிமையாகவும் ஆழமாகவும் வாசகர்களின் மனதில் பதியச் செய்ய உதவும்.

இந்தப் புத்தகம் "தூரம் பதிப்பகத்தினால்" Thooram Publication  வெளியீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.
Thooram
Publication
 


✍️ azeef_ameer 


Thooram Publication 👇
Gmail: thoorampublications@gmail.com

Azeef Ameer 👇 
Facebook: Azeef Ameer
Instagram: Azeef Ameer
YouTube: Azeef Ameer
Telegram: Azeef Ameer
WhatsApp: Azeef Ameer
Gmail: ameeraazeef2001@gmail.com

Comments

Popular posts from this blog

நூல் அறிமுகம் - 05

ஆளுமை அறிமுகம் - 02